Sunday, 20 November 2011

manavalakurichy
இணையத்தின் நோக்கம்                                                                                                                               

இந்த இணையதளம் மணவாளக்குறிச்சி என்ற ஊரை பற்றிய தகவல்களை வெளி இடங்கள், வெளி நாடுகளில் வசிக்கும் இவ்வூர் மக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் இவ்வூரை பற்றிய தகவல்கள் ஓரளவேனும் தர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடங்கள் இணைத்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்காக தமிழ் இலக்கிய நூல்கள், தமிழர் வரலாறு, தமிழ் கவிதைகள், தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கணினி வன்பொருள், மென்பொருள் பற்றிய தகவல்கள்,திருக்குறள் தொகுப்பு போன்றவைகளை ஒரே இணையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனுடன் நமது மாவட்டமாகிய கன்னியாகுமரி பற்றிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது. இத்தளத்தை காண்போருக்கு நிச்சயமாக இது பயன் கொடுக்கும் என்பது என் நம்பிக்கையாகும்.About Manavanakurichi 


பாரத தேசத்தின் தென் திசையில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநிலம் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோயிலிலிருந்து, இராஜாக்கமங்கலம் வழியாக குளச்சல் செல்லும் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தில் தலைசிறந்த பேரூராட்சியாக விளங்குகிறது. மணல்வாழும்குறிச்சி என்பது மருவி மணவாளக்குறிச்சி ஆனது. ஊரை சுற்றி மண்டைக்காடு, திங்கள்சந்தை, அம்மான்டிவிளை, கடியப்பட்டணம், முட்டம், சேரமங்கலம் போன்ற ஊர்கள் உள்ளன.

மணவாளக்குறிச்சி இருப்பிடம்(கூகுள் மேப்)


ஊரின் சிறப்பு
மணவாளகுறிச்சி பேரூர், இந்திய அரசால் சிறந்த கிராமமாக இரண்டு முறை சிறப்பிக்கப்பட்டு (1969 மற்றும் 1970-ம் ஆண்டுகளில்) விருது வழங்கப்பட்டது. ஏனெனில் இவ்வூர் மக்கள் ஜாதி, மத, இன வேறுபாடின்றி ஒற்றுமையுடனும், தோழமையுடனும் வாழ்ந்து வருகின்றனர். இங்கிருந்து நாகர்கோவில் 18 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரி 33 கிமீ தொலைவிலும், தக்கலை 13 கிமீ, திங்கள்சந்தை 6 கிமீ, குளச்சல் 5 கிமீ மற்றும் திருவனந்தபுரம் 76 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மணவாளக்குறிச்சி சந்திப்பு மற்றும் பள்ளி ரோடு

அருகாமையில் இருக்கும் பெரிய ரயில் நிலையம் நாகர்கோவில் ரயில் நிலையமாகும். சிறியது இரணியல் ரயில் நிலையம். திருவனந்தபுரத்தில் பன்னாட்டு விமா ன நிலையமும் உள்ளது. இங்கு இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பேரூராட்சிக்குட்பட்டஊர்களாக பெரியவிளை, சின்னவிளை, பெரியகுளம், ஆரான்விளை, ஆண்டார்விளை, வடக்கன்பாகம், சக்கப்பற்று, ஆசாரிதெரு, பீச்ரோடு, பாபுஜிதெரு, தருவை, பிள்ளையார்கோவில், பம்மத்துமூலை, தேங்காய்கூட்டுவிளை, காந்திநகர் மற்றும் குழிவிளை போன்றவைகள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்

பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, சின்னவிளை தொடக்கப்பள்ளி, பெரியவிளை நடுநிலைப்பள்ளி மற்றும் பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரி, 3 கீமி தொலைவில் லெட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரி, 2 கீமி தொலைவில் உதயா பொறியியல் கல்லூரி, சன் பொறியியல் கல்லூரி, உதயா தொழில் நுட்ப கல்லூரி, புனித ஜான்ஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் புனித ஆஞ்சிசாமி கல்வியியல் கல்லூரியும் அமைந்துள்ளது.

பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி


பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி

பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி தாடி சார் என்றழைக்கப்படும் உயர்திரு. ஜி.சி. சந்திரசேகர் என்பவரால் துவங்கப்பெற்றது. பின்னர் திரு. இராமச்சந்திரன் என்பவரால் நிர்வாகிக்கப்பட்டு, தற்போது கடியப்பட்டிணத்தை சார்ந்த தொழில் அதிபர் திரு. சார்லஸ் என்பவரின் கட்டுப்பாட்டில், ஆசிரியர். ஜாண்சன் என்பவரின் மேற்பார்வையில் இயங்குகிறது. இந்த பள்ளியானது மிக நவீன முறையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு, மாவட்டத்தின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக செயல்படுகிறது. இப்பள்ளி பல பொறியாளர்களையும், மருத்துவர்களையும், மென்பொருள் வல்லுனர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கியுள்ளது. நானும் இப்பள்ளியில் பயின்றவன் ஆவேன்.

சின்னவிளை கடற்கரை

மணவாளக்குறிச்சி ஜங்சனிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் சாலை வழியாக சென்றால் (நடந்து செல்லும் தூரம்தான்) அழகிய சின்னவிளை கடற்கரையை அடையலாம். கடற்கரை அழகிய தோற்றத்துடனும், சிறு மணல் குன்றுகளுடனும், பார்ப்போரின் மனதை வருடும் தன்மையுடனும் அமைந்திருக்கும். விடுமறை நாள்களில் மக்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் இங்கு குருசு பாறை ஒன்றும் உள்ளது. இப்பாறை மீது அமர்ந்து கடலை ரசிப்பது என்பது 100 மெரினாவிற்கு சமம். சின்னவிளை மக்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழிலும், இந்திய மணல் ஆலையில் ஒப்பந்த ஊழியர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

சின்னவிளை குருசுப்பாறை 

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மற்றும் சுசீந்திரம் கோவில் கோபுரம்

இந்திய மணல் ஆலை INDIAN RARE EARTH (IRE)

இந்திய நடுவண் அரசின் நேரடு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது இக்கம்பெனி. தாதுக்கள் நிறைந்த மணல்களால் இவ்வூர் சூழப்பட்டுள்ளது. இந்த கம்பெனி ஆரம்பத்தில், அதாவது சுதந்திரத்திற்கு முன் ஆட்சி செய்த பிரிட்டிசாரால் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து மோனசைட், இல்மனைட், சிலிமனைட் போன்ற தாதுக்கள் மணலிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இத்தாதுக்கள் இந்திய நாட்டுத்தேவைக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு பல சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறது.


அரசு அலுவகங்கள்

மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள பெரும்பாலான அரசு அலுவகங்கள் சின்னவிளை கடற்கரை செல்லும் சாலையிலேயே அமைந்துள்ளது. குறிப்பாக, தபால் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், பிறப்பு மற்றும் இறப்பு அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், பொது நூல் நிலையம், (வரவிருக்கும் சார் பதிவாளர் அலுவலகம்), போன்றவைகள் ஒரே காம்பவுண்டில் அமைந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பயனடைகின்றனர். பக்கத்திலேயே இரண்டு கல்வி நிறுவனங்கள், புகழ் பெற்ற மணவாளக்குறிச்சி பேருந்து நிலையம், மின்சார வாருயமும் உள்ளது. காவல் நிலையம் சின்னவிளை ஊரில் உள்ளது. அதன் அருகில் தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதாவால் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக திறக்கப்பட்ட காவலர் வீட்டு வசதி வாரியமும் உள்ளது.

மணவாளக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஞ்சாயத்து அலுவலகம்

நீர்நிலைகள் மற்றும் வயல்கள்

மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவாக்கி, தக்கலை, இரணியல், திருனைனார்குறிச்சி, மணவாளக்குறிச்சி வழியாக பாய்ந்து கடியப்பட்டணம் கடலில் சங்கமிக்கும் வள்ளியாறு குமரி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்றது. இது மக்களுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுகிறது. அருகில் உள்ள பெரியக்குளம் வருடம் முழுவதும் பாசனத்திற்கு பயன்படுகிறது. பெரியக்குளத்தை சுற்றி பல நூறு ஏக்கர் பரப்பில் நெற்பயில் பயிரிடப்பட்டுள்ளது. அதனை சுற்றி வாழைத்தோப்புகளும், தென்னந்தோப்புகளும் உள்ளன. மேலும் பிள்ளையார்கோவில் புதுகுளம், வக்கன்பாகம் குளம், கால்வாய்களும் உள்ளன.

பெரியகுளம் வயல்வெளிகள்


வழிபாட்டு தலங்கள்

மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட சின்னவிளையில் ஆர்.சி தேவாலையமும், வடக்கன்பாகத்தில் சி எஸ் ஐ தேவாலையமும், படர்நிலத்தில் புனித பத்தாம்பத்தி நாதர் ஆலயமும், சக்கப்பத்தில் சால்வேஷன் ஆர்மி ஆளையமும் கிறிஸ்த்தவ மக்களுக்காகவும், மெயின் ரோட்டில் யானையை வரவழைத்த பிள்ளையார்கோவிலும், தருவையில் பஜனை மடமும், புதுக்கடை தெருவில் அம்மன் கோவிலும், 2 கிமீ தொலைவில் மண்டைக்காட்டில் பகவதியம்மன் கோவிலும், சேரமங்கலத்தில் நடேசர் ஆலயமும் இந்து மக்களுக்காகவும் இருக்கிறது.

மணவாளக்குறிச்சி பீச்ரோட்டில் இஸ்லாமியர்களின் தொழுகை பள்ளிவாசலும், ஆசாரிமார் தெருவில் பட்டாணி சாஹிப் (ஒலி) தர்காவும் உள்ளது. இந்த தர்கா ஆண்டு விழா ஹிஜ்ரி வருடம் ரஜப் மாதம் பத்து நாள்கள் நடைபெறும். இந்த நாள்களில் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் நேர்ச்சை வாங்கி செல்வர். பல சமுதாய மக்களும் நன்கொடை கொடுத்து நேர்ச்சை வாங்குவர்.

பள்ளிவாசல் மற்றும் சின்னவிளை தேவாலையம் 

சுற்றுலா தலங்கள்

  கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாவட்டமாகும். கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, முட்டம், மாத்தூர் தொட்டிப்பாலம், சிதறால் மலைக்கோவில், பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, காளிகேசம், சொத்தவிளை, சின்னவிளை கடற்கரை போன்றவை முக்கியமானவை. முட்டம் கடற்கரை பல தமிழ், மலையாள திரைப்படங்கள் சூட்டிங் அவ்வப்போது நடைபெறும். பாரதி ராஜாவின் பல சினிமாக்கள் இங்கு எடுக்கப்பட்டவையாகும். இங்கு கலங்கரை விளக்கமும் உள்ளது.

முட்டம் மற்றும் கலங்கரைவிளக்கம்

புலியூர்குறிச்சி கோட்டையிலுள்ள டிலனாய்டு கல்லறை மற்றும் சொத்தவிளை பீச்

கன்னியாக்குமரியின் அழகிய தோற்றம்

மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் வட்டக்கோட்டை

வியாபாரத்தலங்கள்

மணவாளக்குறிச்சியில் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் தேவைகளுக்காக அனைத்து தரப்பு கடைகளும் உண்டு. ஜவுளி வியாபாரத்தில் பாம்பே டெக்ஸ், ரவி டெக்ஸ், ஜெயராஜா டெக்ஸ், செல்வராஜ் ஜவுளி வியாபாரம் போன்றவைகளும், ஜெனரல் ஸ்டோரில் கபூர் ஸ்டோர், ரபீக் ஸ்டோர், ஜெரீனா ஸ்டோர் போன்றவைகளும், பலசரக்கு வணிகத்தில் செல்லம் பல சரக்குக்கடை, காதர் பல சரக்குக்கடை, மணி பல சரக்குக்கடை போன்றவைகளும், ஹல்பா மார்ஜின் ப்ரீ மார்கெட், எஸ்.எம்.எஸ். மார்ஜின் ப்ரீ மார்கெட் போன்ற சூப்பர் மார்க்கெட்டும் உள்ளன.

வீடியோ மற்றும் ஸ்டுடியோவில் ஜாண் ஸ்டுடியோ, ஷாம் ஸ்டுடியோ, செக்கீனா ஸ்டுடியோ, வீடியோ ரிச் ஸ்டுடியோ, ரீகன் ஸ்டுடியோ போன்றவைகளும், மருந்து கடையில் சஜி மெடிக்கல்ஸ், பொன்குமார் மெடிக்கல்ஸ் போன்றவைகளும் உள்ளன. மாவட்டத்தில் சில பகுதியில் கிடைக்காத மருந்துக்கள் கூட சஜி மெடிக்கலில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பாப்புலர் திருமணமண்டபம், கே.எஸ்.வி ஆடிட்டோரியம் ஆகிய இரண்டு திருமனமண்டபங்களும், ஒரு சமூக நலக்கூடமும் உள்ளது. அறுசுவை உணவுகளுக்கு பாக்தாத் ஹோட்டல், பேமஸ் ஹோட்டல், தக்கலை பஸ் ஸ்டாப் அருகில் இரண்டு சிற்றுண்டி சாலைகளும், ஜலால் ஹோட்டலும் உள்ளன.

மருத்துவ மனைகள்

தருவையில் எஸ்.பி மருத்துவமனையும், ராயன் குளோரி மருத்துவமனையும் உள்ளது. இங்குள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிறு நோய்களை தீர்க்க இங்கு செல்கின்றனர். எஸ்.பி மருத்துவமனை மிக பழமையான மருத்துவமனையாகும். மணவாளக்குறிச்சி மையப்பகுதியில் அமைந்திருந்த ராஜா மருத்துவமனை, தற்போது சிவா மருத்துவமனை என்ற பெயரில் 07-11-2011 அன்று முதல் செயல்படுகிறது. இம்மருத்துவமனை ஈத்தாமொழியில் செயல்படும் சிவா மருத்துவமனையில் கீழ் இயங்குகிறது. திறப்புவிழா அன்று ஒருநாள் முழுவதும் இலவசமாக மருத்துவசேவையை வழங்கினார்கள். இது 24 மணிநேர சேவையுடனும், புகழ்பெற்ற மருத்துவர்களை கொண்டு செயல்படுகிறது. இதனால் இவ்வூர் மக்கள் மிகவும் பயனுறுகின்றனர்.
   
வங்கிகள்

1. State Bank of Travoncore
2. Indian Oversea Bank
போன்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும்,

1. Muthoot Gold loan Finance Ltd
2. Cape Benefit Fund Ltd
3. ACC Finance
4. Colachel Vickariate Benefit Fund Ltd
5. Kokulam Chit Fund

போன்ற தனியார் வங்கிகளும், சக்கப்பத்து கூட்டுறவு வங்கியும் உள்ளது.

தொழில்கள்

இங்குள்ள மக்களின் மிக பழமையான தொழில் கயிறு திரித்தல் ஆகும், இன்றும் இத்தொழில் பல பகுதிகளில் செய்யப்படுகிறது. குறிப்பாக பரப்பற்று, மணல் ஆலையை சுற்றிய பகுதிகளில் செய்யப்படுகிறது. கடற்கரையை ஒட்டிய பகுதி மக்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர். விவசாயிகளும் மற்று சமையல்கலை வல்லுனர்களும் உள்ளனர்.

கயிறு திரித்தல் மற்றும் மீன் பிடித்தல்

பத்திரிக்கை மற்றும் எழுத்தாளர்கள்

மணவாளக்குறிச்சியில் அன்றாடம் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தினசரி பத்திரிகையில் (தினத்தந்தி, தினகரன்) வெளிவருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் நிருபர் திரு. முருகன் என்பவராவார். இங்குள்ள மக்களுக்கு அனைத்து தின, வார, மாத இதழ்களை விநியோகிக்கும் விநியோகஸ்திராகவும் இருக்கிறார்.
எழுத்தாளர்களில் கல்லை அன்சாரி மிகவும் பிரபலமானவர். இவருடைய இயற்பெயர் அப்துல் அன்சாரி என்பதாகும். இவர் முன்பு வசித்த ஊர் கல்லடிவிளை, தற்போது மணவாளக்குறிச்சியில் வசிக்கிறார். எனவே, தன பெயருடன் சொந்த ஊராகிய கல்லையை இணைத்து கல்லை அன்சாரி ஆனார். இவர் முற்போக்கு சிந்தனை உள்ளவர். தன்னால் இயன்ற உதவியை, மற்றவர் மனம் நோகாமல் செய்து முடிப்பதில் வல்லவர். பல்வேறு சமூக சேவைகளை இலவசமாக செய்து வருகிறார். இவர் சிறு வயதில் மும்பை சென்று, தன் கடின உழைப்பால், நல்ல தொழில் செய்து, மும்பை தமிழர்களை ஒன்றிணைத்து, மும்பை தமிழ் சங்கத்தை தோற்றுவித்து, அதன் செயலாளராக பணியாற்றி, பல தமிழ் அறிஞர்களை வரவழைத்து, நிகழ்ச்சிகள் பல நடத்தி, தமிழுக்கும் தமிழருக்கும் பெருமையினை சேர்த்தவர். சமீபத்தில் மறைந்த பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைனின் நட்பை பெற்றவர். தமிழன் என்ற முறையில் முதல் முதலாக அவரிடம் பேட்டி கண்டவர். அவரால் வரையப்பட்ட "ஆர்ட் அண்ட் சினிமா" என்ற புத்தகம், நேரடியாகவே இவருக்கு வழங்கப்பட்டது. ஓவியரின் மகன்களிடமும் நல்ல மதிப்பை பெற்றுள்ளார். மும்பையில் பல கட்டுரைகள், கதைகள், கவிதைகள் போன்றவைகள் இயற்றியுள்ளார். "மும்பை துடிப்பு", "குமரிக்கடல்" போன்ற புகழ் பெற்ற, மக்காளால் போற்றப்பட்ட புத்தகங்களில் பல தகவல்களை வழங்கியுள்ளார். லேணா தமிழ்வாணன், நாஞ்சில் நாடன், பொன்னீலன், பாரதிராஜா, கதாசிரியர் சிவசங்கரி, பாக்கியராஜ் போற்றோரின் நட்பையும் பெற்றவர். இவரின் மிகமுக்கிய நாவலான "புழுக்கம்" தற்போது திரைப்படமாகவும் எடுக்கப்படுகிறது. மேலும் இவ்வூரில் ஆசிரியர்.ஹக்கீம், தாஜுல் நிஷா (குவைத் தமிழ் சங்கம்), மாணவன் டைசன் போன்ற எழுத்தாளர்களும் உள்ளனர். நம் பார்வைக்கு வராத எழுத்தாளர்கள் இருந்தால் எம்மை தொடர்புகொள்ளலாம்.

MF ஹுசைனின் ஆர்ட் அண்ட் சினிமா புத்தகம் மற்றும் அதன் ஒரு பக்க மாதிரி

கல்லை அன்சாரியுடன் லேணா தமிழ்வாணன் மற்றும் MF ஹுசைனுடன் சிறப்பு பேட்டி


குமரி கடல் பத்திரிகையின் படித்ததும், பார்த்ததும் பக்க செய்திகள் மற்றும் எழுத்தாளர் வலம்புரி ஜாணுடன் கல்லை அன்சாரி


Welcome to Our Website http://mssaleem.blogspot.com

Information of Manavalakurichi || Kanyakumari Information

Tamilnadu Government School Books || Tamilnadu All Universities

Tamil Literature PDF Books || Download Tamil Fonts

M.S.Saleem, Manavalakurichi - 629252, Cell: +91 9944840171

Information of Computer || Computer Tips & Tricks


இந்த இணையத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை : 
StatCounter - Free Web Tracker and Counter


Top

Post a Comment